![Farmers' struggle by going down to the bhavanii canal](http://image.nakkheeran.in/cdn/farfuture/GDE8Ki0n6EbaaZuJX1RUaiYpz6P2WWDmCj4Npa6n4Y4/1689961414/sites/default/files/inline-images/a634.jpg)
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கீழ்பவானி கால்வாய் பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15 தண்ணீர் திறக்கக் கோரி கீழ்பவானி விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கீழ்பவானி கால்வாயில் நல்ல நிலையிலிருந்த மண் கரைகளைச் சேதப்படுத்தி அந்த இடத்தில் கட்டுமான பணிகளைத் தாமதப்படுத்தி தண்ணீர் திறப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் மற்றும் பொதுப்பணித்துறையைக் கண்டித்தும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276ஐ ரத்து செய்யக் கோரியும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னிமலை ஓட்ட குளம் பகுதியில் கீழ்பவானி கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீழ்பவானி கால்வாயில், பாசன நீர் திறந்து விட வேண்டும். நல்ல நிலையிலிருந்த மண் கரைகளைச் சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276-ஐ அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.