கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின், சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த செயற்கை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் பணி புரிவதற்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நிலம் மற்றும் வீடு கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
கடந்த 20 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது, தனியார் ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி கடந்த 5 மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து, இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 385 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுவதாகவும், புதிதாக நிலம் மற்றும் வீடு கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தின் குறைந்தபட்ச சம்பளம் 600 ரூபாய் தருவதாகவும், இந்த சம்பள முரண்பாட்டிற்கான காரணம் கேட்டால், தமிழக அரசின் தோட்டக்கலை பண்ணை மூலமாகத்தான் வேலை வழங்குவதாகவும், தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனவும் என்.எல்.சி அதிகாரிகள் கூறுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாய நிலத்தை அழித்து, ஹைடெக் என்ற திட்டத்தின் மூலம் தங்களுக்கு மீண்டும் விவசாயத்தை என்.எல்.சி நிர்வாகம் கற்றுக் கொடுப்பதாகவும், என்.எல்.சி நிறுவனத்தின் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வேண்டும், நிரந்தர வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் நெய்வேலி காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.