சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா நடைபெற்றது. இதில் கோவிலின் முக்கிய நிகழ்வான மகா அபிஷேகம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் காலை 5.30 மணி அளவில் அபிஷேகத்தை பார்ப்பதற்கு கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் பாஸ்கர் தீட்சிதர் வரவேற்று மகா அபிஷேகத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ஆளுநர் அபிஷேகம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள படியில் ஓரமாக அமர்ந்து உள்ளார். அப்போது அங்கிருந்த கோவில் தீட்சிதர்களின் செயலாளர் உள்ளிட்ட தீட்சிதர்கள் 'இது எங்காத்து பொம்மனாட்டிங்ககூட இங்கு உட்கார்ந்தது இல்லை. நீங்கள் போய் கீழ உட்காருங்க. அங்கு நன்னா தெரியும்'' என கூறியதாகச் சம்பவ இடத்திலிருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் மற்றும் சில தீட்சிதர்கள் கூறினர்.
ஆனால் இதுகுறித்து புதுச்சேரியில் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ''என்னிடம் வந்து கூறினார்கள். நான் கடவுளை பார்ப்பதற்காக வந்தேன்'' எனக் கூறினேன் அவர்கள் திரும்பிசென்று விட்டார்கள். இதனை அவமதிப்பதாக நினைக்கவில்லை கூறியுள்ளார்
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்த சில தீட்சிதர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் ஆளுநரிடமே இவர்கள் இப்படி நடந்து கொண்டது அங்கிருந்தவர்களிடம் முக சுளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். மேலும் ஆளுநர் இதனைப் பெரிது படுத்த வேண்டாம் என்று கூட நினைத்து இருக்கலாம், அப்படி பெரிதனால் பாஜகவில் ஆளுநரைதான் நீங்க ஏன் அங்குப் போனீர்கள் என்று குற்றம் சொல்வார்கள். தீட்சிதர்கள் மீது எந்தக் கோபமும் படமாட்டார்கள். அதனால் நடந்த சம்பவத்தை கூட சிதம்பரத்தில் உள்ளவர்களிடமும் செய்தியாளர்களிடமும் கூறவில்லை. அவருடன் வந்தவர்கள் இதனை புதுச்சேரியில் உள்ள செய்தியாளர்களிடம் கூறியதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து விபரம் அறிய தீட்சிதர்களின் செயலாளர் கார்த்தி என்கிற ஹேமா சபேசன் தீட்சிதரைத் தொடர்பு கொண்டபோது, அவர் தொலைப்பேசியை எடுக்கவில்லை.