பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 190 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் அப்பல்லோ சந்திப்பில் 150 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமான பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.