திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் குழிக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஆழ்துளைக் கிணற்றில் போர்கள் போடப்பட்டு மின் மோட்டார்களை கொண்டு குழாய் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் புதைக்கப்பட்ட குழாய்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இது குறித்து உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த ஊழியர்கள் பொக்லின் உதவியுடன் பள்ளம் தோண்டி குழாய் உடைப்பை சரி செய்ய முயன்றனர். அப்பொழுது செல்வம் என்ற ஊழியர் திடீரென பள்ளத்தில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனடியாக தீயணைப்புத் துறை இருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி அவரை மீட்க போராடி வருகின்றனர். மண் சரிந்து விழுந்தால் மிகப்பெரும் சேதம் ஏற்படும் அபாய நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் அங்கு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.