தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
அதே சமயம் தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை குறித்து அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தின் நிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ள இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும், சரிபார்க்கவும் முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.