![Women cheating Krivalam devotees!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Jv3bvfHrn2Y_aBrDy3AMk9WJypPAe3CmkCEzwmT7ufI/1670401630/sites/default/files/inline-images/th-4_117.jpg)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நவம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், அதைவிட அதிகளவு பக்தர்கள் வருகை தந்திருந்தனர். திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் 9 சாலைகளிலும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
கோவில் மாடவீதி, கிரிவலப்பாதை மற்றும் நகர பகுதிகளில் 200க்கும் அதிகமான இடங்களில் அனுமதி பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பக்தர்களை அழைத்து, அழைத்து உணவு வழங்கினார்கள். உணவு மட்டுமல்லாமல் பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், சுண்டல், பிஸ்கட் பாக்கெட்கள் என அண்ணாமலையாருக்கு வேண்டிக்கொண்டவர்கள் வழி முழுவதும் வழங்கிக்கொண்டே இருந்தார்கள். பக்தர்களும் விரும்பியதை வாங்கி சாப்பிட்டபடி கிரிவலம் வந்தார்கள்.
![Women cheating Krivalam devotees!](http://image.nakkheeran.in/cdn/farfuture/iEiH0PavyrGxzFM7UOCRLbp4VViySw477BWnd5rcqgI/1670401647/sites/default/files/inline-images/th_3523.jpg)
இதில் மோசடிகளும், மிரட்டல்களும் நடந்தது பக்தர்களை வேதனைப்பட செய்தது.
மாடவீதி மற்றும் கிரிவலப் பாதையில் சில இடங்களில் இரண்டு இரண்டு பெண்களாக நின்று கொண்டு பெரிய சில்வர் அண்டாக்களில் மோர் வைத்துக்கொண்டு கிரிவலம் சென்று கொண்டு இருந்தவர்களின் கைகளை பிடித்து இழுத்து டம்ளர்களில் மோர் தந்து குடிக்கவைத்தார்கள். குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்துவிட்டு கிளம்பியவர்களிடம் மோர் தந்த பெண்கள், ‘எங்கப்போற ஒருடம்ளர் மோர் 10 ரூபாய் தந்துவிட்டு போ’ எனக்கேட்டனர். ‘நீங்களாதானே கையை பிடிச்சி இழுத்து தந்திங்க’ எனக் கேட்கும் பக்தர்களிடம், ‘நான் குடுத்தா நீ குடிப்பியா’ என சண்டை போட்டனர். இலவசமாக மோர் தருகிறார்கள் என நினைத்து வாங்கி குடித்த பொதுமக்கள் ஏமாந்து போய் அவர்களிடம் சண்டைப்போட விரும்பாமல் வேதனையுடன் அவர்கள் கேட்ட பணத்தை தந்துவிட்டு கிரிவலம் சென்றனர்.
![Women cheating Krivalam devotees!](http://image.nakkheeran.in/cdn/farfuture/66wrK6mNF8Dp1njZAIQE7DC-zjMWeU2IxQvlZOf1OL0/1670401668/sites/default/files/inline-images/th-2_1189.jpg)
இப்படிப்பட்ட பெண்கள் மாடவீதி, நகரப்பகுதிகளில் அதிகளவில் இருந்தனர். இந்த பெண்கள் பௌர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் இங்கு வந்துவிடுகிறார்கள். இவர்களின் குறி அப்பாவியாக இருப்பவர்கள்தான். குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாக பார்த்து அவர்களுக்கு மோர் தந்து குடித்த பின்பே பணம் வாங்குகின்றனர். காசா எனக் கேட்பவர்களிடம் முதல்ல குடிங்க எனச்சொல்லி குடிக்கவைக்கின்றனர். பலரும் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள், பால்பாயாசம் தருகிறார்கள், மோரும் இலவசம் என நினைத்து வாங்கி குடிக்கிறார்கள். புறப்படும்போதே காசு கேட்டு மிரட்டுவதால் நொந்துப்போய் வந்த இடத்தில் எதுக்கு பிரச்சனை என தந்துவிட்டு செல்கின்றனர். இது எல்லாம் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடக்கிறது. ஆனால் அவர்கள் கண்டுக்கொள்வதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் கிரிவலம் வந்த பக்தர்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.