Skip to main content

பணத்தை இழந்த பெண்; மானபங்கம் செய்த மோசடி நபர்! 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

The woman who lost her money to Fraudulent person

 

தலைவாசல் அருகே, கணவரைப் பிரிந்து தனியாக வாழும் பெண்ணிடம், மூலிகை ஏற்றுமதி மூலம் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 8 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், தலைவாசல் காட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பார்வதி (48). இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். சொந்தமாக வைத்துள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விருத்தாசலம் அருகே உள்ள கொளஞ்சியப்பர் கோயிலுக்கு பார்வதி அடிக்கடி செல்வது வழக்கம். அதே கோயிலுக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் அடிக்கடி வந்து செல்வார். இதில் அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

 

அப்போது கனகராஜ், அஸ்வகந்தா மூலிகை, செம்மரக்கட்டை பவுடர் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், இந்த தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் பார்வதியிடம் கூறியிருக்கிறார். மேலும், இந்த தொழிலில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

 

இதை நம்பிய பார்வதி, தன்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை கனகராஜின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். பின்னர் கனகராஜ், தனது நண்பர் சடையன் என்பவரை அழைத்துக்கொண்டு பார்வதி வீட்டிற்குச் சென்று, மேலும் முதலீடு செய்தால் இன்னும் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளார். அதன்பேரில் பார்வதி, மேலும் 5 லட்சம் ரூபாயை கனகராஜிடம் கொடுத்துள்ளார். 

 

ஆனால் மாதங்கள் பல கடந்தும் கனகராஜ் உறுதியளித்தபடி லாபத் தொகை எதுவும் தரவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பார்வதி, லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் முதலீடு செய்த அசல் தொகை 8 லட்சம் ரூபாயை மட்டுமாவது திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். 

 

அவரிடம் இருந்து நெருக்கடி அதிகரித்ததால் கனகராஜ், ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்றைய தினம் வீட்டிற்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி கனகராஜ் குறிப்பிட்ட தேதியில், பார்வதி அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கனகராஜ், பெண் என்றும் பாராமல் அவரை சரமாரியாகத் தாக்கியதோடு, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 

 

காயம் அடைந்த பார்வதி அவரிடம் இருந்து தப்பிச்சென்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து அவர் செய்யாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கனகராஜ், மூலிகை ஏற்றுமதி தொழிலின் பெயரில் பார்வதியிடம் 8 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் செய்யாறு காவல்துறையினர் ஏனோ வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளனர். 

 

இதற்கிடையே பார்வதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்வதியின் புகார் குறித்து சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கனகராஜ், அவருடைய கூட்டாளி சடையன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்