திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டியில் விறுவிறு என வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டி.கொசப்பாளையம் பகுதியில் கனிமொழி (49 வயது) என்ற பெண் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்த நிலையில் அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்பவர் திடீரென கத்தியால் பெண்ணின் கழுத்தில் குத்தினார். உடனடியாக அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசார் கனிமொழியை மீட்டதோடு, கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவர் ஏழுமலையை மடக்கிப் பிடித்தனர்.
52 வயதான ஏழுமலை ஏற்கனவே குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று வந்த நிலையில் மனைவி கனிமொழியை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் ஏழுமலை. மனைவி வேறொரு ஊரில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு முன்னாள் மனைவி கனிமொழி வந்த நிலையில், நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஏழுமலையை விரட்டிப்பிடித்து கைது செய்த கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.