![Woman killed](http://image.nakkheeran.in/cdn/farfuture/2YETNrtV2kImS2DH_XK17B6rQilOKoEd1sul6wU_p90/1538404480/sites/default/files/inline-images/cdm%20murder.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூர் கிராமத்தில் பூவாலை கிராமத்தைச் சேர்ந்த பிரேமா(45) என்ற பெண் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளார். இவர் வசிக்கும் வீடு கடந்த 4 நாட்களாக வெளியில் பூட்டப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறிய தகவலின் பேரில் காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தனர்.
அப்போது பிரேமா உடலில் துணிகள் இல்லாமல் நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அழுகிய நிலையில் உள்ளது. தனியாக வசித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொன்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதனை அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜெயக்குமார் சிதம்பரம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இறந்தவருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
பூட்டிய வீட்டில் பெண் நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு செய்து இந்த பெண் கொல்லப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.