![Wind speed variation Rain in Tamilnadu for next days](http://image.nakkheeran.in/cdn/farfuture/IYpGZnCiO3Lx58BjuyrT8xOJqqi16dSz1o_IFvYu4xY/1672746206/sites/default/files/inline-images/422_7.jpg)
கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
4 மற்றும் 5ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் 6 மற்றும் 7ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.