![Wild elephant ... Surveillance by drone for the first time!](http://image.nakkheeran.in/cdn/farfuture/jNUaFfxbf2AEWjbXGn8P_C2D-hDcEzFC-PkC_KOV-Og/1608205983/sites/default/files/inline-images/hgjyti6ti6.jpg)
ஒரே வாரத்தில் மூன்று பேரை கொன்ற காட்டுயானையைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ள நிலையில் தற்பொழுது அந்த யானை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த ஒரே வாரத்தில், 3 பேர் காட்டுயானை ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தந்தையும் மகனும் அந்தக் குறிப்பிட்ட யானையால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் காட்டுயானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நேற்று காலை நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் உள்ள புதர் ஒன்றில் அந்த யானை இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். ஆனால், அந்த யானையுடன் 12 யானைகள் இருந்ததால் அந்தக் குறிப்பிட்ட ஒரு யானைக்கு மட்டும் மயக்க ஊசி செலுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் தொடர் முயற்சியால் முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாம் முறை மயக்க ஊசி செலுத்தவும், பல்வேறு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஊசியைச் செலுத்தியுள்ளனர்.
யானை மறைந்துள்ள பகுதி சமதளப் பகுதியாக இல்லாமல் மேடு பள்ளங்கள் நிறைந்த புதர்ப் பகுதியாக இருந்ததால் யானை மயக்கமடைந்தாலும், அதனை வாகனத்தில் ஏற்றுவது மிகவும் சவாலான காரியம் எனக் கூறிய வனத்துறையினர் யானை முழுமையாக மயக்கமடைவதற்கு முன், அதனைச் சமதளப் பகுதிக்குக் கொண்டுவர முயற்சி செய்தனர். அதேபோல் யானையை வண்டியில் ஏற்ற கும்கி யானையும் கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று மாலை இறுதி வரையிலும் போராடியும் அந்த ஒற்றை யானையைக் கூட்டத்தில் இருந்து பிரிக்கமுடியவில்லை. இதனால் யானையைப் பிடிப்பதற்கான வனத்துறையின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த யானை நீலகிரி கூடலூர் வனப்பகுதிக்குள் ஊடுருவியது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் யானையை முதல் முறையாக ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த யானையைச் சுற்றி 10 யானைகள் உள்ளது. இதற்காகக் கோவை முதுமலையிலிருந்து ட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.