![wife who incident her husband and tied it in a sack](http://image.nakkheeran.in/cdn/farfuture/f1I5D6kqlSKlfgFqdhitgdPddesAfIzIJatn5pX-ORw/1688364331/sites/default/files/inline-images/1000_56.jpg)
திருச்சி சோமரசம்பேட்டை, வாசன் வேலி பகுதியில் உள்ள 16வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சிவலிங்கம்(40). இவர் வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், அவருக்கும் அவருடைய மனைவி தனலட்சுமிக்கும் (36) அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மனைவி தனலட்சுமி அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய உறவினர்களான செந்தில்குமார்(40), கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(55), ஆறுமுகத்தின் மனைவி சுமதி(44) ஆகியோருடன் இணைந்து சிவலிங்கத்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாசன்வேலியில் இருந்த காரில் ஏற்றிக்கொண்டு அல்லித்துறை வழியாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் குட்டப்பட்டு மேம்பாலம் வழியாக உடலை தூக்கி எரிய வந்துள்ளனர். அப்போது அங்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் விஜயகுமார் என்ற காவலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் காரை சோதனையிட்டபோது, காரில் சாக்கு மூட்டையில் ரத்தம் சொட்டுவதைப் பார்த்து சந்தேகித்துப் பார்த்தபோது, அதில் சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் மூட்டைக்குள் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து சோமரசம்பேட்டை காவல்துறையினருக்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்ய முயன்றுள்ளனர். அதில் விஜயலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செந்தில்குமார் மட்டும் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ராம்ஜிநகர் மற்றும் சேமாரசம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.