விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி - சென்னை சாலையில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் நசீமா(53). இவர், கடந்த 3ஆம் தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த வேலையாக புதுச்சேரிக்கு சென்றுள்ளார். பணிகளை முடித்துக்கொண்டு இரவு வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நசீமா, கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், சின்னக் கோட்டக்குப்பம் கறிக்கடை தெருவைச் சேர்ந்த கொத்தனார் அர்ச்சுனன் மனைவி கலையரசி(35), திடீரென நசீமாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் அவரது வீட்டில் களவு போன 20 பவுன் நகையை ஒப்படைத்தார் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது கலையரசி, நசீமாவிடம் ‘உங்கள் வீட்டில் ஆள் இல்லாத போது, எனது கணவர் அர்ச்சுனன் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடி கொண்டு வந்துள்ளார். அந்த நகையை என்னிடம் கொடுத்தார். திருடி நகை, பணம் நமக்கு வேண்டாம்; இது தவறு, அதை உரியவரிடம் கொண்டுபோய் கொடுத்து விடுமாறு கூறினேன்.
அவர், அதற்கு தயங்கினார். எனவே நான் அதனை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன்’ என்று தெரிவித்து நசீமாவிடம் கொள்ளைபோன 20 பவுன் நகையை கொடுத்துள்ளார். மேலும், நசீமாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து நசீமா கோட்டை பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். போலீசார் அர்ச்சுனன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.