Skip to main content

“இதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியப் போக்கே” - தென்காசி விவகாரத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

“The reason for this is DMK. Govt's indifference” - OPS condemns Tenkasi issue

 

“ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சா'தீ'யை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும்” - என தென்காசி சாதிய தீண்டாமை விவகாரத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது. "சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஔவை பிராட்டியார். "சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டும், ஆங்காங்கே தலைகாட்டுவது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும்.

 

 தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தொற்று நோய் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சுழற்சி முறையில் சாதி அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டது; ஒருசில பள்ளிகளில் வருகைப் பதிவேடு சாதி அடிப்படையில் பராமரிக்கப்பட்டது; சில பள்ளிகளில் கை மணிக்கட்டில் கயிறு கட்டப்பட்டது; இதன் காரணமாக ஒரு மாணவன் உயிரிழந்தது என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.  

 

இந்த வரிசையில், தற்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே பாஞ்சாகுளத்தில் ஒரு சிறுவனுக்கு மிட்டாய் தர மறுத்த சம்பவம், தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தினத்திலிருந்து கைபேசிகளில் வைரலாக பரவிக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுமறியா பிஞ்சு உள்ளத்தில் சா'தீ'யை விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதை எண்ணும்போது மனித இனம் தலைகுனிய வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. 

 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியருக்கு கல்வியை போதிப்பது மட்டுமின்றி, அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பள்ளிக் கல்வித் துறையின் தலையாய கடமையாகும். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இது தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே என்று சொன்னால் அது மிகையாகாது. 

 

சட்டப்படி இதனை ஒழிக்க ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஊர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசி, அனைத்துத் தரப்பு மக்களிடையே இதுகுறித்த மாற்றத்தை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாகும். தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், ஒரு பாவச் செயல், ஒரு குற்றம் என்பதை அனைவரும் உணரும் வகையிலும், எல்லோரையும் சகோதர, சகோதரிகளாக பாவிக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரின் மனங்களில் நிலைநிறுத்தும் வகையிலும், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றும் வகையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் தீண்டாமை ஒழிப்பு என்பது முற்றிலும் அகற்றப்படும். இல்லையெனில், சாதி மோதல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டிற்கு நல்லதல்ல.

 

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும். சாதி மோதல்களை தவிர்க்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் தேவையான ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்