“தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை செய்ய முன்வராததால் வட மாநில தொழிலாளர்கள் மூலம் மாதம் 18 ஆயிரம் கோடி வட மாநிலங்களுக்கு செல்கிறது” என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருத்தாசலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது. மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர வர்த்தக நல சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரமைப்பு மாநில துணைத் தலைவர் கே.கே.டி.பழமலை வரவேற்றார். விருத்தாசலம் மாவட்ட கவுரவத் தலைவர் ம.அகர்சந்த், மாவட்டத் தலைவர் பி.டி.ராஜன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா முகமது ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். தேசிய முதன்மை துணைத் தலைவரும், பேரமைப்பின் மாநிலத் தலைவருமான விக்கிரம ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருத்தாசலம் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்து, ஈரோட்டில் நடைபெறும் 40வது வணிகர் தின மாநில மாநாடு குறித்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அரசு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று ஆன்லைன் டிரேடிங் மற்றும் பெரிய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் சாமானிய மனிதர்களை துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது. இதை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் புதியதாக சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவரும் வேலை செய்வதற்கு முன் வர வேண்டும். வேலை இல்லை இல்லை என்று சொல்லி தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் வரும் வேலை வாய்ப்பை தேடிச் சேர வேண்டும். வேலை தருவதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கின்றோம். குறிப்பாகத் தமிழகத்தில் இருக்கக்கூடிய வடநாட்டைச் சேர்ந்த நண்பர்கள் இங்கு பணியாற்றி கிட்டத்தட்ட 18,000 கோடி வருவாய் மாதா மாதம் அவர்களால் வட மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆகவே தான் வணிகம் மிகவும் பின்தங்கி கொண்டு இருக்கிறது. ஆகவே, தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மதுபானத்திற்கு அடிமையாகி விடாமல், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல், அனைவரும் வணிகத்தில் தடம் பதித்து உழைப்பதற்கு தயாராகுங்கள்.
இளைய தலைமுறைகளுக்கெல்லாம் பல்வேறு வணிகத்தை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இளம் தொழில் முனைவோர் மூலமாகப் பல்வேறு சலுகைகளைப் பெற்று தந்து இருக்கிறது. வருகிற மே 5ல் வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. வணிகர்களுடைய உரிமை முழக்க மாநாடாக அந்த மாநாடு அமைய இருக்கிறது. அந்த மாநாட்டில் கடலூர் மண்டலத்திலிருந்து முப்பதாயிரம் வணிகர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வணிகர்கள் ஈரோட்டிலே குவிய இருக்கிறார்கள். நாடு முழுவதும் இருந்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த மாநாட்டிலே பங்கேற்க இருக்கிறார்கள். மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளார்கள். இந்த மாநில மாநாடு வணிகர்களுக்கான திருப்பு முனை மாநாடாக அமையும் என்கிற நம்பிக்கை இருக்கின்றது" என்று கூறினார்.