
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அறிவுதிருக்கோயிலில் பெண்மையை போற்றிடும் விதத்தில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு டிஆர்ஓ அழகிரிசாமி தலைமை வகித்து பேசுகையில், எந்த ஒரு மனிதனும் வாழ்வில் பெண்மையின் துணையில்லாமல் வாழ்வதில்லை. பெண் முதலில் தாயாக வருகிறாள். பிறகு சகோதாரியாக, தாரமாக, மகளாக, செய்பணிகளில் பங்கு கொள்பவளாக வருகிறாள். இவ்வாறு பெண்ணின் துணையில்லாமல் யாரும் இல்லை. ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே அவ்வாழ்க்கை இறைநிலை நோக்கிய பயணத்தில் அர்த்தமுள்ளதாகிறது. குடும்ப வாழ்க்கையிலே இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வைச் சீரமைத்து வாழ்வதற்கு, கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.
அந்த இரு ஆன்மாவும் ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும். கருத்து வேறுபாடும் பிணக்கும் இல்லாமல் என்றும் மாறாத நட்போடு வாழ்வது மிகமிக அவசியமாகும். அதற்காகவே தம்பதியர் ஒருவரை ஒருவர் தினந்தோறும் வாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக “வாழ்க வளமுடன்” என்ற ஒரு அற்புத மந்திரத்தை மகரிஷி கொடுத்துள்ளார். அவ்வாறு வாழ்த்தி அதன் இனிமையை உணர்ந்து மனைவியை மதித்து போற்றிடும் விதத்தில் கொண்டாடும் விழாவே மனைவிநல வேட்பு விழா என்றார்.
மனவளக்கலை பேராசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்து பேசுகையில், தியாகத்தின் திருவுருவான பெண்மையை வாழ்க்கைத்துணையை போற்றுகின்ற விழா இதுவாகும். சுமார் 20 ஆண்டு காலம் அன்பு காட்டி வளர்த்து, கல்வி தந்து, ஆளாக்கி விட்ட பெற்றோரை பிரிந்து தன்னை நம்பி வந்த தியாகத்திருவுருமான மனைவியை கணவன் என்றென்றும் போற்ற வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாகும். உலகிலேயே மிக உயர்ந்த நட்பான கணவன் மனைவி நட்பை உயர்வாக மதித்து போற்றிட வேண்டும் என்றார்.
மனவளக்கலை பேராசிரியர் ராதாலட்சுமி - தியாகராஜன் தம்பதியர் மனைவி நல வேட்பு விழா செய்முறை நடத்தினர். இதை தொடர்ந்து தம்பதியர்கள் காந்தப் பரிமாற்றத் தவம் செய்தனர். அருட்காப்பு செய்து கொண்டனர். கணவர்கள் மனைவியை வாழ்த்தி ரோசாப்பூவை அன்பாக வழங்கினர். ஒரு கனியைப் போன்று கனிவாகவும், மென்மையாகவும் வாழ்ந்து தொண்டாற்றுவேன் என்று மனைவியர் தங்கள் கணவருக்கு வாழைக்கனியைத்தந்தனா;. வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் கூறி வாழ்த்தி மகிழ்ந்தனர்.
பின்னர் ராமலிங்கம்,கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், மகாதேவி ஆகியோர் தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனர். இதில் பேராசிரியர்கள் ஹேமலதா, புவனேஸ்வரி,கவிதா, மகாலெட்சுமி, பருவதம், மல்லிகா,அகல்யா மற்றும் அறங்காவலர், துணைப்பேராசிரியர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்திரசேகரன் வரவேற்றார்.முடிவில் பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.