டாஸ்மாக்கில் மது வாங்க ஏன் ஆதார் அட்டையை கட்டாயமாக்ககூடாது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் பார்களின் உரிமம் பெற விண்ணம் கோரப்பட்ட நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை எனவே டாஸ்மாக் பார் உரிமம் கோருவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில்,
தமிழக தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இணையதளம் முழுமையாக செயல்படுவதால் எந்த வித இடைக்கால தடையும் விதிக்க முடியாது என வாதாடினார். அதனையடுத்து வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வருடம் 25 ஆயிரம் கோடி மட்டுமே அரசுக்கு டாஸ்மாக்கில் வருமானம் வருகிறது ஆனால் தனியார் நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாயை ஈட்டுகிறது என்றார்.
இந்த வழக்கில் கருத்து கூறிய நீதிபதிகள், தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தின் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக்கூறினார் .
டாஸ்மாக்கில் மது வாங்க ஏன் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது, டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி என மாற்றக்கூடாது, டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை ஏன் மூடக்கூடாது என கேள்வி எழுப்பி வரும் மார்ச் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.