‘துவக்க நாளில், தங்களின் ஓட்டலுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசித்த ஜாகிர் உசேன் என்பவர், ‘பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி’ என, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து விளம்பரப்படுத்தினார். அவர் நினைத்தது போலவே, சலுகை விலையில் பிரியாணி கிடைக்கிறது என்பதால், கூட்டம் முண்டியடித்தது. பிறகென்ன? காவல்துறையினர் வந்து விரட்ட வேண்டியதாகிவிட்டது.
விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில், ’சென்னை பிரியாணி’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்தார் ஜாகிர் உசேன். அறிமுக சலுகைக் கட்டணமாக, ரூ.10-க்கு பிரியாணி என்று அறிவித்ததால், காலை 10-30 மணிக்கே 50 பேர் வரை வரிசையில் காத்திருந்தனர். பிரியாணி விற்பனை தொடங்கியது. முதலில் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள், பிறகு பொறுமையிழந்து, ஓட்டல் வாசல் முன்பாக, மொத்தமாக குவிந்தனர்.
அது பிரதான சாலை என்பதால், வாடிக்கையாளர்களின் ஆக்கிரமிப்பால், போக்குவரத்துக்கு இடையூறாகி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு வழியின்றி தடையேற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஓட்டல் நிர்வாகத்தினரும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு விரைந்த அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர், கூட்டத்தை விரட்டியடித்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஒரே இடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கூட்டம் சேர்வதோ, முகக்கவசம் அணியாமல் இருப்பதோ, கடும் நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்படும் குற்றமாகும் என ஓட்டல் நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஓட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன் மீது, கரோனா பரப்புதல், தனிமனித இடைவெளியின்றி கூட்டத்தைக் கூட்டுதல் என, கரோனா பரவல் தடைச் சட்டம், பிரிவு 188, 269, 270 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.