ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அதனால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, கடந்த இரு நாள்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் என்பவரிடம் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடிக்கு அவர் சீர்திருத்த முறையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அடியாள்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கார்களில் திங்கள்கிழமை (மார்ச் 9) இரவு கொளத்தூர் வந்தனர். இளமதிக்கு வேறு சாதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் அந்த கும்பல் ஈஸ்வரன் மற்றும் செல்வன் ஆகியோரை கடத்திச் சென்று காவிரி கரையில் வைத்து தாக்கியுள்ளது. கொளத்தூர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மார்ச் 10ம் தேதி காலையில் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே அந்த கும்பல் இளமதியை கடத்தி ச்சென்று விட்டது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவர்கள் இருவருக்கும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவஞானம், மாவட்டத் தலைவர் குழந்தைவேலு, மாவட்ட செயலாளர் இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மேட்டூர் தாலுகா செயலாளர் வசந்தி உள்ளிட்டோர் புதன்கிழமை (மார்ச் 11) மேட்டூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினர். அவர்கள், திராவிடர் விடுதலைக்கழக மாநிலத் தலைவர் கொளத்தூர் மணியையும் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து ஆலோசித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, காதல் மனைவி இளமதியை அவருடைய பெற்றோர் கடத்திச்சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும், கடத்தலில் ஈடுபட்டோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்வன் கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் இளமதியின் பெற்றோர் உள்பட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.