பூர்வ குடியான தாழ்த்தப்பட்ட மக்களை திட்டமிட்டு அகற்றி வருவதாக கூறி அதிகாரிகளுடன் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள நெடுஞ்செழியன் நகரில் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூவம் ஆறு புனரமைப்பு பணிகளுக்காக அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுப்பணித் துறையினர் அகற்றி வருகின்றனர். இதனால் அங்கு வாழ்ந்து வந்த 800 குடும்பங்களில் 528 குடும்பங்களுக்கு மட்டும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டன. மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று மீண்டும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வந்த போது அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது இடிபட்ட வீடுகளை பார்வையிட வந்த சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித், “இந்த அரசு சென்னையின் பூர்வகுடி தாழ்த்தப்பட்ட மக்களை திட்டமிட்டு அகற்றி வருவதாகவும், தொடர்ச்சியாக அம்மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இங்கு அதிகாரிகள் மக்களை தகாத முறையில் நடத்துகின்றனர். தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் அவர்கள் பதிலளிக்கவில்லை. சென்னையில் 50 சதவிகிதம் வசித்த மக்கள் தற்போது 20 சதவிகிதமாக குறைந்துள்ளனர். மறுசீரமைப்பு என்ற பெயரில் சென்னையில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை இந்த அரசு திட்டமிட்டு செய்கிறது” என்று தெரிவித்தார்.