கூடன்குளம் போராட்டத்தில் ஈடுபட்டதாக 300 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட முகிலன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடைசியாக 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தோழர் நல்லக்கண்ணு, வை.கோ போன்றவர்கள் சொன்னதால் போராட்டத்தை கைவிட்டார்.
அதன் பிறகு கடந்த 2017- ல் அரவக்குறிச்சியில் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டு கரூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் பல வழக்குகள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக அவரது உடன் போராட்டங்களில் கலந்து கொண்ட சக தோழர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் ஜூலை முதல் நாள் அதிகாலை பாளையங்கோட்டை சிறையில் தூங்கிக் கொண்டிருந்த முகிலனை எழுப்பி மதுரை சிறைக்கு மாற்றிவிட்டதாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் எடுத்து வந்த உடைகள் அடங்கிய பேக்கை காணவில்லை.
மதுரையில் 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத விசாரணை சிறைவாசிகள் தொகுதி 2ல் மாணவர் தொகுதியில் தனி இருட்டறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் நாள் இரவிலேயே கொசுக்கடியால் அவரது உடைகள் ரத்தக் கரையாகிவிட்டது. ஏதோ திட்டமிட்டு இப்படி தனிமைப்படுத்தி உள்ளனர் என்றும் அவரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்றும் சக தோழர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் ஜூலை 3 ந் தேதி கூடன்குளம் வழக்கு விசாரனைக்காக வள்ளியூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட உள்ளார். இப்படி அவரை அடிக்கடி அலைக்கழிக்கவும் அவர் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ச்சவும் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தோழர்கள் கூறுகின்றனர்.