தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பாராளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்று தமிழக அரசு நினைப்பதால், மார்ச் மாதம் நடக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி மாதத்திற்குள் நடத்திவிடலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சில நிறுவனங்களுக்கான நில எடுப்பு சம்மந்தமாக ஒப்புதல் பெறுவதற்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுகுறித்து எந்த நடவடிக்கையும் ஆளுநர் எடுக்காததால், மீண்டும் அதுகுறித்து நினைவூட்டல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொழில்நிறுவனங்கள் ரூபாய் 12 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தொழிற்துறை விரிவாக்கத்துக்கு அமைச்சரவை அளித்த ஒப்புதல் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை ரீதியான முடிவு எடுப்பது குறித்தும், மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முயற்சியை தடுத்து நிறுத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.