திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.
இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்திருந்தாலும் இறுதிக்கட்டமாக ரிக் இயந்திரத்தைக் கொண்டு 3 மீட்டர் இடைவெளியில் ஒரு மீட்டர் அகலத்தில் குழி தோண்டும் பணி கடந்த ஒன்பது மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிசக்திவாய்ந்த மற்றொரு இயந்திரம் நடுகாட்டுப்பட்டி ப்பகுதிக்கு வந்திருக்கிறது. இந்த இயந்திரம் தற்பொழுது துளையிடும் இயந்திரத்தை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்த இயந்திரமாகும். இந்த இயந்திரத்தை கொண்டு துளையிடும் பணிகள் நடைபெறும்.
குழந்தை சுஜித் நலமுடன் மீண்டுவர தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் பிரார்த்தனைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது. சுஜித் நலமுடன் மீண்டு வர இலங்கை யாழ்ப்பாணத்தில் மக்கள் திரண்டு அமைதிப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல் சுஜித் மீள வேண்டும் என சென்னை சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் திருவான்மியூரில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. திருவாரூர் பாத்திமா பேராலயம் தக்கலை மதரஸா மாணவர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 47 மணி நேரத்தை தாண்டி இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சுஜித் குழந்தை மீட்கப்பட்டடு மீண்டும் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் குழந்தையை காப்பாற்ற தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.