தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
போகியுடன் இன்று (13/01/2025)பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில்,அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை தி.நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறாக பேசிய வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ''பெரியார் குறித்து அவதூறாக பேசி வரும் சீமானை அதிமுக ஏன் வலுவாக கண்டிக்கவில்லை? ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? பெரியாரை விமர்சித்து விட்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சீமான் எப்படி சந்திக்கப் போகிறார் என்று பார்ப்போம்'' எனத் தெரிவித்தார்.