Skip to main content

'முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு' - ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க அரசு: மு.க.ஸ்டாலின்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

mk stalin


"பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில்கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடாத நிலையில், 'முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு' என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க அரசு" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் “2019 - 20 கல்வியாண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்” என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, முற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் மத்திய அரசை, “தண்ணீரை விட ரத்தம் கெட்டியானது” என்ற ரீதியில் பாரதீய ஜனதா கட்சி செயல்பட வைப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்ட மண்டல் குழு அறிக்கையை 1990-ல் பிரதமராக இருந்த சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய போது “மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அறிவித்து தனது பதவியை தியாகம் செய்தார். ஆனால் அந்த அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் இப்போது முற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டிற்கான அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் அரசிதழில் வெளியிடப்படுகிறது. “அமலுக்கு வருகிறது” என்று உடனே மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

 

ஆனால் இதே அமைச்சரின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடும், மலை வாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடும் எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டு - வஞ்சிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பதவிகளில் எப்படி எல்லாம் முற்பட்ட சமுதாயத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில பத்திரிகையே (17.01.2019) செய்தி வெளியிட்டுள்ளது.

 

40 மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் 14.38 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பேராசிரியரும், அசோசியேட் பேராசிரியரும் ஜீரோ சதவீதம்! பேராசிரியர் பதவியில் 3.47 சதவீதம் பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ வெறும் 0.7 சதவீதம். ஆனால் முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 95.2 சதவீதம். அசோசியேட் பேராசிரியர்களின் எண்ணிக்கை 92.9 சதவீதம். உதவிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 1.3 சதவீதம். இப்படி மத்தியப் பல்கலைக்கழகங்கள் அத்தனையும் முற்பட்டோர் சமுதாயத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு, சமூக நீதி அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

 

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தும் மத்திய அரசு துறைகளில் அது “அனாதை” போல் விடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள 71 துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணிபுரிகிறார்கள். ரயில்வே துறையில் 8.05 சதவீதமும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் 8.42 சதவீதமும், மத்திய அமைச்சரவை செயலகத்தில் 9.26 சதவீதமும், நிதி அயோக்கில் 7.56 சதவீதமும், குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.56 சதவீதமும், துணை குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.69 சதவீதமும் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

 

இதுதவிர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 11.43 சதவீதமும், சிஏஜி அமைப்பில் 8.24 சதவீதமும் இடம்பெற்றுள்ளார்கள். மத்திய பல்கலைக்கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளும் நிரப்பப்படவில்லை. குறிப்பாக மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 25 வருடங்களுக்கு மேலான பிறகும் அந்த சமுதாயத்தினரால் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் தங்களது உரிமையைப் பெற முடியவில்லை. பறிக்கப்பட்டுள்ள இந்த சமூக நீதி பற்றி பிரதமர் திரு நரேந்திரமோடி கண்டுகொள்ளவில்லை. முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை. ஏன் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது துறையில் கூட மண்டல் கமிஷனை முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கவே இல்லை!

 

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய போது பிரதமர் வி.பி.சிங் அவர்கள், “சமமற்றவர்களை சமமாக நடத்துவது (Treating unequals equal) மாபெரும் சமூக அநீதி. அந்த அநீதி உடனடியாக நீக்கப்பட வேண்டும்” எனக் கூறி “அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு” என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், “முழுமையாக மண்டல் குழு பரிந்துரைகளையோ அல்லது மண்டல் குழுவினுடைய பரிந்துரைகளுக்கும் அப்பாற்பட்ட இன்னும் மேலாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையோ, சலுகைகளையோ நாம் பெற வேண்டுமென வாதாடுவதற்கு ஒரு அடித்தளம்தான் இந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது” என்றார். ஆனால் “முதலுக்கே மோசம்” மட்டுமல்ல - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு சமூக நீதிக்காவலரும், தலைவர் கலைஞர் அவர்களும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தையே தகர்த்தெரியும் விதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செயல்படுகிறது.

 

நாட்டில் பல்வேறு “பிளவு” பாதைகளை வகுக்க முற்பட்டு, அத்தனையிலும் தோற்றுவிட்ட நிலையில், “முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு” என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை! இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும். “வளர்ச்சி” என்ற மாயஜாலத்தை காட்டி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்.

 

 “சமூக”த்திலும், “கல்வியிலும்” பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றி மிகப்பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்துவிடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஆகவே தான் செய்த துரோகத்திற்கு பிராய சித்தமாக மத்திய அரசு துறைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று இந்தியாவின் “சமூக நீதித் தொட்டில்” எனக் கருதப்படும் தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்