திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சம்பாபயிர்கள், குறைந்த காலத்திலேயே கதிர்கள் வந்ததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கலந்த ஏமாற்றத்திற்கு ஆளகியுள்ளனர். விதையை மாற்றிக் கொடுத்து ஏமாற்றியதே காணரம் என்று இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சம்பா சாகுபடி பணிகள் மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நன்னிலம், மற்றும் பெரும்புகளூர் கிராமங்களில் விவசாயிகள் விட்ட சம்பா நாற்றுகள் நடவுக்கும் முன்பே கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெரும்புகளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் அந்த மனுவில் பெரும்புகளூர் கிராமத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வண்டாம்பாளை என்ற இடத்தில் உள்ள கமலாம்பிகை என்ற கடையில் நீண்ட நாள் பயிரான சிஆர் 1009 என்ற விதை ரகத்தை வாங்கி 180 ஏக்கர் பரப்பளவு சாகுபடி மேற்கொள்ள நாற்றுவிட்டு விட்டுள்ளனர்.
ஆனால் நடவு பணிகள் மேற்கொள்ளவதற்கு முன்பாகவே கதிர் வந்துவிட்டதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தரமற்ற விதைகளை வழங்கிய கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு இழப்பினை பெற்றுத்தர வேண்டும் "என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்
.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மனுவை வழங்கிவிட்டு தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து விவசாய சங்க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்". ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் கானல் நீராகி போய்விட்டது. காவிரியில் தண்ணீர் இல்லாமலும் போதுமான பருவமழை இல்லாமல் விவசாயம் முழுமையாக அழிந்து, உணவின்றியும் கால்நடைகளுக்கு உணவு இல்லாமலும் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இந்த ஆண்டுகிடைத்த தண்ணீரை நம்பி நாற்றுவிட்டிருந்த விவசாயிகளுக்கு விதைகள் மூலம் அழிவுவந்துள்ளது, விதைகள் தரமானதா, முளைக்கும் திறன்கொண்டதா, இந்த பருவத்திற்கு ஏற்ற ரகமா, தரமான விதை உற்பத்திசெய்கிறார்களா, விற்பனை செய்யும் வியாபாரிகள் அனுபவமானவர்களா, என கண்காணிக்கவேண்டிய வேளாண்மை அதிகாரிகள் கையூட்டு வாங்கிக்கொண்டு விற்கசொல்கின்றனர், விற்பவர்களுக்கு என்ன ரகம் என்பதுகூட தெரியாமல் பணத்திற்காக விற்பனை செய்துவிடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த சம்பவம், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதைகளை விற்பதையும் குறைத்துக்கொண்டு தனியாரை ஊக்கப்படுத்துவதால் வந்த வினைதான் இது, இதற்கு முழுபொறுப்பு மாவட்ட வேளாண் இணை ஆணையரும், விதையில் கையொப்பம் போட்டுள்ள அதிகாரியுமே பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கின்றனர்.