தீவிபத்து இல்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு கட்டளைகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும், வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு, சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் பணியாற்றுவோர் ஊர் திரும்ப வசதியாக நவம்பர் 5ம் தேதியன்று அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசடைவதைக் காரணம் காட்டி, பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தீவிபத்து இல்லாத, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களுக்கு தீக்காயங்களும், பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்க பின்வரும் அறிவுரைகளை வழங்க வேண்டும்...
* பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிர்ப்பதுடன், டெரிகாட்டன், டெரிலின் போன்ற எளிதில் தீப்பற்றும் ஆடைகள் அணியக்கூடாது.
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ, உடலுக்கு அருகில் வைத்தோ வெடிக்க வேண்டாம்.
* கூட்டமான பகுதிகள், சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் அருகில் பட்டாசு வெடிக்க வேண்டாம்.
* மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
* விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது.
* பள்ளிகள்தோறும் பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், ஊர்வலங்கள் ஆகியவற்றை தீயணைப்புத்துறை அலுவலர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்.
* தலைமை ஆசிரியர்கள், நிர்வாகத் தலைவர்கள் ஆகியோர் இறைவணக்கக் கூட்டங்களில் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
* தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்து சிலேடை நிகழ்ச்சி, வரைபட போட்டிகளை ஒருவார காலத்திற்கு நடத்த வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார்.