நெல்லை மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணி வரை ஒண்டிவீரன் நினைவுநாள், மற்றும் மன்னர் பூலித்தேவன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பொது அமைதியைக் காக்கிற வகையில் 15 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஷில்பா.
மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியிலிருக்கும் நெல்கட்டும் செவல் பாளையத்தை அரசாண்டவர் மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்திவிழா செப்.1 ம் தேதியும், அவரின் படைத் தளபதிகளில் ஒருவரான ஒண்டிவீரனின் நினைவு தினம் பாளையம் அருகிலுள்ள பச்சேரியில் ஆக. 20 அன்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன்காரணமாக அவரவர் சமூகம் சார்ந்த மக்கள் பொது நல அமைப்பினர், அமைச்சர்கள் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். அதற்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் தொண்டர்கள் திறந்த வாகனங்களில் வரக்கூடாது, வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு வரவும், கோஷங்கள் எழுப்பவும் தடைசெய்யப்படடுள்ளது.
ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் செல்லக்கூடாது. அந்த வழியாகச் செல்லும் பொதுத் துறை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கான இதர வாகனங்கள் தவிர்த்து ஒண்டிவீரன் நினைவுதினம், பூலித்தேவன் மன்னர் ஜெயந்திவிழாவிற்கு வரும் விருப்பார்வத் தொண்டர்களின் வாகனங்கள் போலீசாரின் முன் அனுமதி பெற வேண்டும் னெ்று கலெக்டர் ஷில்பா பிறப்பித்த 144 தடையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இவ்விழாக்கள் காரணமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் குறிப்பிட்ட அந்த இரண்டு தினங்களில் மட்டும் மாவட்டத்தின் வழியோரத்திலுள்ள 92 அரசு டாஸ்மாக் கடைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.