தமிழகத்தின் நியாயத்தை கண்டுகொள்ளாத பிரதமர் காவிரி ஆணையம் எப்போது கூடும்? என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதன் முதல் கூட்டத்தை நடத்துவதற்கான மற்றொரு வாய்ப்பையும் தமிழக அரசு இழந்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல், முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான உத்தரவாதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது பெருந்துரோகமாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி அதன்பின் 12 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான், அத்தீர்ப்பை செயல்படுத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இம்மாதத் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டன. ஆனால், கர்நாடகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக்கும் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகம் அதன் உறுப்பினர்களின் பெயர்களை ஜூன் 12-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில், அதை கர்நாடகம் மதிக்கவில்லை. மத்திய அரசும் இதை கண்டுகொள்ளாதது தான் கொடுமை.
தில்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஒதிஷா தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் நாட்டின் வளர்ச்சி சார்ந்த விஷயம் தான் என்பதால், கூட்டத்தில் பங்கேற்க வந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியிருக்க வேண்டும்; காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக அறிவிக்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி தம்மை சந்தித்த போதாவது இதுகுறித்து பிரதமர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழக நலன் சார்ந்த விஷயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அத்தகைய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் பற்றி பிரச்சினை எழுப்பி, காவிரி சிக்கலை தீர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஏதேனும் உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி சிக்கல் பற்றி பெயரளவில் குறிப்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டார். தில்லியில் பிரதமரை சந்தித்தாவது காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியை நிதி ஆயோக் கூட்டம் நடந்த அரங்கத்தில் நடந்துகொண்டே சந்திக்கும் வாய்ப்பு மட்டும் தான் முதல்வருக்கு கிடைத்தது. இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று ஆட்சியாளர்களால் அழைக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு காவிரி பிரச்சினை குறித்து பிரதமரை சந்தித்து பேச கடந்த 5 மாதங்களாக வாய்ப்பு மறுக்கப்படுவதும், நிகழ்ச்சி முடிந்து போகும் வழியில் பிரதமரை யாரோ ஒருவரைப் போல சந்தித்து பேசும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். அப்போது கிடைத்த வாய்ப்பில் கூட காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதலமைச்சர் எதுவும் பேசவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று கர்நாடகம் துடிக்கிறது. கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்பதில் தமிழகத்திற்கு பொறுப்பு இல்லை; மத்திய அரசுக்கு அக்கறையில்லை. இத்தகைய சூழலில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்பாகவே அமையும். காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. இவை தமிழகத்திற்கு எதிரான கூட்டுத் துரோகமாகும்.
மற்றொருபுறம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. கபினி அணைக்கு வினாடிக்கு 35,000 கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் வந்தபோது மட்டும் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. இதன்மூலம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ மதித்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை; அணையின் பாதுகாப்பு கருதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104 டி.எம்.சி ஆகும். அதில் பாதிக்கும் மேல், 56 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விடும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு அரை டி.எம்.சி கூட இருக்காது. இது பெரும் அநீதி.
கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததை விட இப்போது 10 மடங்குக்கும் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதிலிருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தை வடிகாலாகத் தான் கர்நாடகம் பார்க்கிறதே தவிர, காவிரியில் சம உரிமை கொண்ட மாநிலமாகப் பார்க்க மறுக்கிறது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறுவது தமிழகத்தின் உரிமை. ஆனால், கர்நாடகமோ தமிழகத்திற்கு தண்ணீரை பிச்சை தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு வடிவம் கொடுக்கப்படும் போது தான், இச்சிக்கலை ஓரளவாவது தீர்க்க முடியும்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். இம்மாத இறுதிக்குள் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி, குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.