Skip to main content

சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் வழக்கு... ஆவணங்கள் எங்கே?-நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

Where are the documents?-Memo to court staff!

 

தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ஒருவர், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி, பெண் எஸ்.பி.ஐ தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

 

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த 2021 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

கடந்த ஓராண்டாக இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பிக்கும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ள பெண் எஸ்.பிக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளது என்ற தகவல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி புஷ்பராணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து காணாமல் போன ஆவணங்களின் நகலை வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் தற்பொழுது வரை அந்த ஆவணங்கள் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பவும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்