சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை 58 நாட்கள் தொடர் நூதன மற்றும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே இந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்கப்படும் என அரசாணை 45-ஐ வெளியிட்டார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், அந்த அரசாணையை தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் அமல்படுத்த முடியாது என்றும் பழைய கல்விக் கட்டணத்தையே கட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால், வேதனை அடைந்த மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 70வது நாள் போராட்டத்தில் அரசாணை 45-ஐ அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, தேர்தல் நேரம் என்பதால், போராட்டங்களுக்கு அனுமதி இல்லாத நேரத்தில் மாணவர்கள் தொடர்ந்து நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். இதனைத் தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் அரசாணை வெளியிட வேண்டுமெனப் போராட்டத்தை நடத்தலாம் ஆனால் அரசாணையை அமல்படுத்த வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது இங்குதான் நடைபெறுகிறது. தமிழக அரசின் அரசாணை போலியானதா என்ற கேள்வியும் எழுவதாக தெரிவித்துள்ளனர்.