நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டாக்டரின் மகனான மாணவன் உதித்சூரியா, கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்றதை அடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அந்த மாணவனின் ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படமும், தற்போதுள்ள முகமும் மாறுபட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தேனி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தியபோது, அந்த மாணவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரது ஹால் டிக்கெட் மற்றும் தற்போது உள்ள புகைப்படம் அவரது மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் கேட்டபோது, தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவர் (உதித்சூரியா)ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி இருப்பதாக எங்களுக்கு இமெயில் மூலம் புகார் வந்தது. இதனையடுத்து அந்த மாணவனை வரவழைத்து விசாரணை நடத்தினோம். அந்த மாணவன் நீட் தேர்வில் எழுதிய ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம் வேறு மாணவனைப் போல் இருந்தது.
எனவே இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளுக்கும் இந்திய மருத்துவ கழகத்திற்கும் தகவல் அனுப்பி வைத்துள்ளோம். அவர்களின் உத்தரவின் பேரில் தேனி க.விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மாணவனின் தந்தை சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இது குறித்து மாணவனின் பெற்றோர் அவரை அழைத்து விசாரித்தபோது தங்களது பையன் நீட் தேர்வு எழுதியதாக கூறினார் தமிழகத்தில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் உள்ள போது மும்பையில் எதற்காக தேர்வு எழுதினீர்கள் என கேட்டதற்கு ஏற்கனவே இரண்டு முறை தமிழகத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்து விட்டதாகவும், இதனால் வேறு மாநிலத்தில் தேர்வு எழுத முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் மாணவன் எங்கே உள்ளார் என கேட்டபோது ஆள் மாறாட்ட புகாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த மாணவன் கல்லூரிக்கு வராமல் உள்ளார் என தெரிவித்தனர்.இருப்பினும் அவர்களது பேச்சில் நம்பிக்கை தன்மை இல்லை என்பதால் அனைத்து ஆவணங்களையும் டெல்லி தேசிய தேர்வு முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகாருக்கு உள்ளான மாணவன் கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என தெரிந்தால் அந்த மாணவன் மீது தேர்வு முகமை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். குறிப்பாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முடியாது என உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது வேறு மாணவன் நீட் தேர்வு எழுதிய நிலையில் சம்பந்தமில்லாத மாணவன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் வேறு ஏதேனும் பகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள இந்த புகாரை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளியே உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.