களியக்காவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சையது முகம்மது மற்றும் அப்பாஸ் ஆகியோரைப் பிடித்து கேரள காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. வில்சன் உடலில் பாய்ந்த குண்டுகளும், பெங்களூரில் தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எஸ்.ஐ. வில்சன் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலர் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டி வருவதாக, தமிழ்நாடு காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு க்யூ பிரிவு காவல் துறையினர் கர்நாடக காவல்துறையினர் மற்றும் பிற அமைப்புகளின் உதவியுடன், பெங்களுரில் வசித்து வந்த முகமது ஹனீப்கான், அப்துல் சுபனால், இம்ரான்கான் ஆகியோரை கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கைத் துப்பாக்கிகளும், குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மனு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.