தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை:’’ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் டி. ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நவம்பர் 30 ஆம் தேதி நடத்தினர். இதில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை கூட்டமைப்பினர் முன்வைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சரும், அதிகாரிகளும் எந்த கோரிக்கைக்கும் தீர்வு காண எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீதரின் ஒருநபர் குழு அறிக்கை தற்போது தமிழக அரசிடம் உள்ளதாகவும், அதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் டி.எஸ். ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்து மாதக் கணக்கில் ஆகியும் அதுகுறித்து விரைவாக பரிசீலனை செய்யாமல் தமிழக அரசு கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகிறது.
அரசு ஊழியர், ஆசிரியர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கடுகளவேனும் அக்கறை இருக்குமேயானால் கடந்த ஒரு மாத காலத்தில் இப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம். தங்களது பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தான் இறுதி முடிவாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தினை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை எதிர்கொள்வதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் நிவாரணப் பணிகளை காரணம் காட்டுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் எங்களது போராட்டத்தினால் கஜா புயல் நிவாரணப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளனர். எனவே, தமிழக முதலமைச்சர் கஜா புயலை காரணம் காட்டி அரசு ஊழியர் போராட்டத்தை திசைத் திருப்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு இயங்க வேண்டுமென்றால் அரசு ஊழியர் ஒத்துழைப்பில்லாமல் இயங்க முடியாது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டுமென்ற அக்கறை இருக்குமேயானால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சினையை தீர்க்க முயல வேண்டுமென தமிழக முதலமைச்சரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். ’’