Skip to main content

“எச். ராஜாவின் கருத்து தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியே” - அமைச்சர் பதிலடி!

Published on 21/03/2025 | Edited on 21/03/2025

 

Minister sekarbabu says H Raja comment is an attempt to create religious issue in TN

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அறங்காவலராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்தது. அதில், “அவர் (நர்க்கீஸ்கான்) இஸ்லாமியர் அல்ல. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் இராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை.

மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள் என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாஜக நிர்வாகி எச். ராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது தொட்ர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம், இராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளநர்கீஸ்கான் (தந்தை பெயர் : தங்கராஜ்) என்பவர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். அவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் அல்ல. தனது பிறப்பின்போது தாயார் மிக சிக்கலான நிலையில் இருந்ததால் அப்போது பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரை தனக்கு வைத்ததாக நர்கீஸ்கான் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்கான சான்றுகளும் இணைக்கப்பட்டுள்ளன. எதனையும் தீர விசாரித்து, ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் குடுக்கையாக எடுத்தோம், கவிழ்தோம் என்ற முறையில் எச். ராஜா துவேசமாக கருத்து தெரிவித்து பதிவிட்டிருப்பது அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியே. இந்த எண்ணம் திராவிட மாடல் ஆட்சியில் ஒருபோதும் ஈடேறாது. இத்தகையவர்கள் என்றுமே தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்