
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளைத் தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் என்.ஆர். சிங், இன்று (21.03.2025 - வெள்ளிக்கிழமை) சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையத்தில் ரயில் நடைமேடை பகுதிகள் உள் வளாகப் பகுதிகள், மேற்கூரையில் நடக்கும் பணிகள், வெளி வளாகப் பகுதிகள், உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
அப்போது சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அவரிடம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், ரயில்வே துறையினர் மற்றும் சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உடன் இருந்தனர்.