வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த ஜம்புகுளம் அடுத்த தொண்டமநத்தம் கிராமத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் பட்டாசு பெட்டிகள், வெடிமருந்துகள் வைத்திருப்பர். இந்த குடோனில் ஏப்ரல் 30ந்தேதி, அந்த பட்டாசு குடோனில் பணியாற்றும், 20 வயதான சந்தோஷ், ஸ்டாக் இறக்கிவைக்க சென்றுள்ளார். அப்போது தன்னுடைய நண்பர் 16 வயதான சதிஷ் என்பவரை உதவிக்கு அழைத்துசென்றுள்ளார். இருவரும் பட்டாசு இறக்கிவைத்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது சந்தோஷ், வெளியே சென்று வருகிறேன், தீ பெட்டிகளை இறக்கிவைத்துக்கொண்டுயிரு எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்படி சென்ற சிறிது நேரத்தில் அந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியுள்ளது. இதில் வெடிமருந்து பெட்டிகளை இறக்கிக்கொண்டுயிருந்த சதிஷ் வெடிவிபத்தில் சிக்கி தீக்கு இரையாகியுள்ளார்.
வெடிசத்தம் கேட்டு அக்கிராமத்தினர் அங்கு திரண்டு வந்துள்ளனர். அருகே செல்ல முடியாத அளவுக்கு வெடிகள் வெடித்துள்ளன. இதுப்பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து தீணை அணைத்தனர். இந்த வெடிவிபத்து சம்மந்தமாக சோளிங்கர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேநேரத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த குடோனின் உரிமையாளரான வாலாஜாவை சேர்ந்த சசிகுமாரை விசாரணைக்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முறையான ஆவணங்கள் இல்லாதது, பாதுகாப்பு சாதனங்கள் இல்லாதது, குறைந்த வயதுடைய ஒரு சிறுவனை வேலை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சசிகுமாரை காப்பாற்றவும், இறந்து போன பையனுக்கு நஷ்டயீட்டை வழங்கி வழக்கை நீர்த்து போக வைக்க ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் பேசிவருவதாக கூறப்படுகிறது. இது இறந்த பையனின் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.