![jlk](http://image.nakkheeran.in/cdn/farfuture/QoJl1Gf0kRu1X9cwsAuPkj3MiOjNDoVmBs4W0XrDYZU/1671430812/sites/default/files/inline-images/gjk_8.jpg)
கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பாகப் பொங்கல் பண்டிகைக்காக 'பொங்கல் சிறப்புத் தொகுப்பு' அறிவிக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. சில இடங்களில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு விமர்சனங்களை திமுக அரசின் மீது முன்வைத்தது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு இழைத்த நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் பொங்கல் வர உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்குப் பணம் வழங்கலாமா? இல்லை வழக்கம் போல் பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கலாமா? இல்லை இரண்டும் வழங்கலாமா என்று உணவுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில தினங்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.