தமிழ்நாட்டில் மாணவர்கள் குறைவாக உள்ள 830 அரசுப்பள்ளிகளை மூடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்க இதே அரசாங்கம் தான் நிதியும் வழங்குகிறது. தனியார் பள்ளிகளை வாழ வைத்துவிட்டு மாணவர் குறைவு என்று அரசுப் பள்ளிகளை மூடும் திட்டத்தையும் அறிவித்துள்ளது அரசாங்கம்.
ஆனால் அரசுப்பள்ளிகளை வளப்படுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அந்தந்த கிராம இளைஞர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்து வருகிறார்கள். அதற்காக மாணவர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், வேன் வசதி, என்று சிறப்பு பரிசுகளையும் சொந்த செலவில் செய்து வருகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறையை இளைஞர்களே போக்கி காலிப்பணியிடங்களை நிரப்பி சம்பளம் கொடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகிறார்கள். பல ஆசிரியர்களும் விடுமுறை காலங்களில் வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு அனைவரையும் அதிரிச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகரில் காமராஜபுரத்தில் மாணவர் சங்கம், பொறந்த உருக்கு புகழச் சேரு இயக்கம் இணைந்து வீடு வீடாக பறை அடித்து சென்று அரசுப் பள்ளியில் மாணவர்களை சேருங்கள். தனியார் பள்ளியில் பணம் பிடுங்குவார்கள். குழந்தைகளின் மனநிலை தான் பாதிக்கப்படும் அரசாங்கம் சலுகை செய்கிறது அரசுப் பள்ளிக்கே மாணவர்களை அனுப்புங்கள் என்று விழிப்பணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் இருந்த புதுகை செல்வா.. அரசுப்பள்ளியில் படித்தவர்கள் தான் இன்றளவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அரசாங்கம் மாணவர்களுக்கு சலுகை கொடுக்கிறது. அதை சரியாக பெற்றோர்களிடம் கொண்டு போகவில்லை. மேலும் சலுகை கொடுக்கிற அரசாங்கம் தான் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கவும் நிதியும் கொடுக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். அதே போல ஒரு ஆசிரியரின் குழந்தை தனியாரில் படித்தால் அந்த ஆசிரியருக்கு வரிவிலக்கு கொடுக்கும் அரசாங்கம் அதே குழந்தை அரசுப் பள்ளியில் படித்தால் சலுகை இல்லை. இப்படி முரண்பட்டு அரசாங்கமே செயல்படுவதால் தான் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அந்த குழந்தைக்கு துணையாக பக்கத்து வீட்டு குழந்தையையும் அனுப்பி வைக்கிறார்கள்.
இப்போது தமிழக அரசு 830 அரசுப் பள்ளகளை மூடுவதாக சொல்லி இருக்கு. ஒரு பள்ளியை கூட மூடவிடாமட்டோம். தற்போது புதுக்கோட்டையில் தொடங்கியுள்ள பறை அடிக்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பரவும். எங்கெல்லாம் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் குழு போய் வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்வோம். தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நாம் அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு நம் பிள்ளையை தனியாருக்கு அனுப்பிவிட்டு நம் பள்ளியில் மாணவர் சேர்க்கையை குறைத்துவிட்டால் பள்ளி மூடப்பட்டால் நம் பிள்ளை ஆசிரியருக்கு படித்து முடித்த பிறகு பள்ளிகளே இல்லாமல் எப்படி அரசு பள்ளி ஆசிரியர் ஆகமுடியும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.