தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரையான மாபெரும் தமிழ்க்கனவு 100 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் எனது மாபெரும் தமிழ்க்கனவு. ஆண்டுதோறும் அனைத்து கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடத்தப்படும். அண்ணா என்ற ஒற்றைச் சொல் லட்சக்கணக்கான இளைஞர்களை தமிழ் சொந்தங்களை இணைக்கும் ஒற்றுமை சொல்லாக மாறியது. அண்ணாவின் பேச்சுகளை மாலை நேரத்து நூலகம் என சொல்லுவார்கள். அவர் தான் படித்த அத்தனையும் தன் மொழியில் இந்த நாட்டிற்கு சொன்னார். அண்ணாவின் பேச்சுகள், தலைப்புகளை மையப்படுத்தித் தான் இருக்கும். 1961ல் அண்ணா பேசுவதற்காக தலைப்பு கேட்ட பொழுது விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தலைப்பு இல்லை என அண்ணாவிடம் சொன்னார்கள். அப்போது தலைப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்வதா என்று அண்ணா பேசினார்.
தொடர்ச்சியான பரப்புரை மூலமாகத்தான் நல்ல பரப்புரைகளை விதைக்க முடியும். ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று கலைஞர் சொல்லுவார். அதுபோல் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி விதைத்தால் தான் அண்ணா காலத்தில் உருவான மாணவர்களைப் போல் உருவாக்க முடியும்.
அனைவரும் நமது இனத்தின் வரலாறு, மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும். தமிழ்நாடு இளைஞர்களுக்கு தன்னைப் பற்றிய சிந்தனையும் நாட்டைப் பற்றிய பொது நோக்கமும் இருக்க வேண்டும். இளைஞர்கள் சமூக வலைதளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.” எனக் கூறினார்.