தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் ஒரு காரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஐயப்ப பக்தர்கள் வந்த கார் குமுளி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது எஸ் வளைவு தாண்டி பென்ஸ்டாக் குழாய் அருகே வரும்போது நிலைத் தடுமாறி 40 அடி பள்ளத்தில் இருந்த பென்ஸ்டாப் குழாயில் தண்ணீர் வரும் மெகா சைஸ் பைப் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் வந்த சிவகுமார், வினோத், நாகராஜ், கோபாலகிருஷ்ணன், கன்னிச்சாமி, கலைச்செல்வன், தேவதாஸ், முனியாண்டி ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா, ஹரிஹரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களையும் மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களையும் மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவர, அவர் உடனே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் ஆட்சியர் முரளிதரன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும்படியும், தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும், காயம் அடைந்தவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி வழங்குவார் என்று கூறியிருந்தார்.
அதன்படி இன்று, முதல்வர் உத்தரவுப்படி உயிரிழந்த 8 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று அமைச்சர் ஐ. பெரியசாமி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் என நிவாரணத் தொகையாக வழங்கினார். இதில் தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான மகாராஜன், தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உட்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.