கேரளாவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான 'மனோரமா நியூஸ்' நடத்திய 'கான்க்லேவ் 2022' என்ற நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (30/07/2022) காலை 11.00 மணிக்கு காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கைக்கான கூட்டணி. ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்; இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. இந்தி ஒரு போதும் திணிக்கப்படாது என உறுதிமொழி அளித்திருந்தார் ஜவஹர்லால் நேரு.
பல்வேறு மொழி பேசும், பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்கள் இந்தியாவில் உள்ளனர். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளித்தார் ஜவஹர்லால் நேரு. மாநில அரசுகளை தன்னிறைவுப் பெற்ற அரசுகளாக வைத்தால்தான் நாடு வலுப்பெறும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை மக்களுக்கு எதிரானது. இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 6% தமிழகத்தின் பங்கு உள்ளது" எனத் தெரிவித்தார்.
பிரதமர் வருகையால் தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இவ்வாறு பேசியுள்ளார்.