சென்னை கொண்டித்தோப்பில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக பிடிபட்ட இளைஞர் முன்னாள் மிஸ்டர் இந்தியா என்பதும், கடன் தொல்லை காரணமாக கொள்ளையனாக மாறியதும் தெரியவந்துள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரத்னா தேவி என்ற பெண் கடந்த 17ம் தேதி கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்திலிருந்த 10 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுதொடர்பாக ரத்னா தேவி போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக ஏழுகிணறு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆராய்ந்தனர்.
ஒரு பக்கம் இதுதொடர்பாக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சனிக்கிழமை மாலை கொரட்டூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இதேபோல் மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். அந்தப் பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அந்தப் பகுதியில் கொள்ளை அடித்ததும், கொண்டித்தோப்பில் கொள்ளையடித்ததும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், சவுகார்பேட்டையில் தங்கம் உருக்கும் கடை ஒன்றில் சந்தேகத்திற்குரிய இளைஞர் ஒருவர் தங்க நகையை உருக்க வந்திருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அடுக்கடுக்கான உண்மைகள் தெரியவந்தன.
மண்ணடியைச் சேர்ந்த முகமது பைசல் என்ற அந்த நபர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பி.டெக் பொறியியல் படிப்பை முடித்த முகமது பைசல் படிக்கும்போதே அகில இந்திய அளவிலான இளையோருக்கான ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். படிப்பை முடித்த முகமது பைசல் தன்னுடைய துபாய் நண்பர் மூலம் ஐபோனை வாங்கி இங்குள்ள நண்பர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் அதிக ஐபோன்களை வாங்கிய நபர் ஒருவர் பணத்தை திருப்பித் தராததால் கடன் நிலைக்கு தள்ளப்பட்ட முகமது பைசல், இறுதியாக செயின் பறிக்கும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளார். தன் தாய் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டியில் நம்பர் பிளேட்டுகளை அகற்றிவிட்டு முகத்தை மறைக்க ஹெல்மெட் போட்டுக்கொண்டு முதன்முறையாக கொண்டித்தோப்பில் ரத்னா தேவியிடம் 10 சவரன் நகை பறித்துள்ளார். அந்தச் சம்பவத்தில் போலீசாரிடம் சிக்காததால் இரண்டாவதாக கொரட்டூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு இறுதியில் சிக்கியள்ளார் முகமது பைசல்.