மதுரையில் கிரானைட் குவாரி அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய 3 கிராமங்களில் உள்ள புறம்போக்கு இடத்தில் கிடைக்கும் பல்வேறு வண்ண கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குவாரிகளில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டியெடுக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கிரானைட் குவாரிகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் எனவும், இது குறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3வது தளத்தில் உள்ள புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததும், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.