மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எழுதியுள்ள இந்த கடிதத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியிடம் நேரில் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.