வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் கவனம், கல்வியில் இருந்து சிதற அதிக வாய்ப்புள்ளதால், இணையத்தள சேனல் மற்றும் தொலைக்காட்சி மூலமாகக் கல்வி பயிற்றுவிக்க, நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த சையது கலேஷா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பள்ளி மாணவர்கள் தங்களது முழு ஆண்டு தேர்வுகளை எழுதி முடிக்காத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கி உள்ளதால், அவர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புகளை வளர்க்க, தேவையான கல்வி தற்போது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு கரோனா தொற்றின் பயத்தில் இருந்து விடுபட நாள் தோறும் தடையில்லா கல்வி அவசியமாகும். ஏற்கனவே, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 'ஸ்வயம் பிரபா' என்ற தொலைக்காட்சி ஒளிப்பரப்பி வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் கல்வி, மாணவர்கள் கண் பாதிப்பு தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து, ஜூலை 6-இல் விசாரிப்பதாகத் தள்ளி வைத்தனர்.