
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இன்று தொடங்க இருக்கும் பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுப் பணியில் மொத்தமாக 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். முறைகேடுகளை தடுப்பதற்காக 4,800 பேர் அடங்கிய பறக்கும் படைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 250 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு 20,476 பேர் சிறப்புச் சலுகைகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கின்றனர்.
இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களே…மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல; வாழ்வின் அடுத்தநிலைக்கான படிக்கட்டுகள்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.