இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதன்முதலில் சாத்தூர் சட்டமன்ற (அதிமுக) உறுப்பினர் ஆனார் அல்லவா எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்? தொகுதி வளர்ச்சிக்கான அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பூரித்துப்போய் இருக்கிறார், அவர்.
அப்படி என்னென்ன கோரிக்கைகள் நிறைவேறியிருக்கின்றனவாம்?

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையின்போது, வெம்பக்கோட்டை மேலான்மறை நாடு அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வைப்பாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணையும், வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் வல்லம்பட்டி ஓடையின் குறுக்கே ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணையும், மக்கள் மற்றும் கடைகள் மிகுந்த நெருக்கடியான ஏழாயிரம் பண்ணை சாலையை புறவழிச்சாலையாக மாற்றி அமைப்பதாக அறிவிப்பு செய்ததும்தான்!
மானிய கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிட்டதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குடிமராமத்து நாயகன், விவசாயிகளின் உற்ற தோழன், இரண்டாம் கரிகால சோழன் என்று புகழ்ந்து தள்ளிவிட்டு, இதற்கு உறுதுணையாக இருந்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் நன்றி தெரிவித்தபடி இருக்கிறார்.