Skip to main content

“தடைகளையெல்லாம் கடந்துதான் முன்னேறியாக வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
We must overcome all obstacles and progress CM MK Stalin

சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் எனக்குத் தனி மகிழ்ச்சி வந்துவிடும். ஏனென்றால், எல்லோருக்கும் தெரியும் என் மனதுக்கு நெருக்கமாக விளங்கும் 'நான் முதல்வன்' திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்ததே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த அகாடமியை தொடங்கினோம் இதுவரைக்கும் பத்து பேட்ச் பெண்கள். ஆறு பேட்ச் ஆண்கள் இங்கே பயிற்சி முடித்து வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு என்றால் 816 பெண்கள் 444 ஆண்கள் என்று மொத்தம் 1260 பேர். இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியால் நல்ல வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள். இப்போது பெண்களுக்கான பதினொன்றாவது பேட்சில் 78 மாணவிகளும் ஆண்களுக்கான ஏழாவது பேட்சில் 49 மாணவர்களும், டெய்லரிங் ஏழாவது பேட்சில் 355 மகளிரும் என்று மொத்தம் 482 பேர் பயிற்சி முடித்திருக்கிறார்கள். அடுத்து, பெண்களுக்கான பன்னிரண்டாவது பேட்சில் 80 மாணவிகளும் ஆண்களுக்கான எட்டாவது பேட்சில் 50 மாணவர்களும், டெய்லரிங் எட்டாவது பேட்சில் 360 பெண்களும் பயிற்சி பெற இருக்கிறார்கள்.

மடிக்கணினியும், சான்றிதழும் வழங்க மட்டும் இன்றைக்கு நான் வரவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்குத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இப்படி பார்த்து பார்த்து அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துகின்ற திட்டங்களை நிறைவேற்றி, கொளத்தூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கெல்லாம், அதாவது இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இதை ஒரு மாடல் தொகுதியாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை எல்லாம் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இங்கே வருகிறபோது, அருமை தங்கை அனிதாவின் தியாகத்தைப் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களில் இருந்து முன்னேறி வருகின்ற நம்மை போன்றவர்களுக்கு சமூகத்தில் ஏகப்பட்ட தடைகள் பல வரும். அந்த தடைகளை நியாயப்படுத்தவும் பல பேர் இருப்பார்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதே தவறு என்பது போலவும், சிலர் புலம்பிக் கொண்டு இருப்பார்கள், பேசிக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் கடந்துதான் நாம் முன்னேறியாக வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்